மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . 2

அன்பு நண்பர்களே வணக்கம்.

மூலிகையும் மந்த்ரமும் என்னவென்று அறியும் முன் நாம் யோகம் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது ,

ஆகவே இந்த பதிவினில் யோகம் பற்றிய முக்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் .

யோகமும் , மூலிகையும் , மந்த்ரமும் என்னவென்று பார்ப்போம் .

முதலில் யோகம் . . .

மனித வாழ்வினில் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நன்மைகள் பெருகி வருவதை நாம் யோகம் என்கிறோம் , காரணம் , நமது எண்ணங்களுக்கும் , செயல்பாட்டிற்கும் மேல் அதிகமாக நன்மைகள் கிடைப்பதால் அதனை நாம் யோகம் என்று சிறப்பித்து கூறுகிறோம்.

ஆனால் இப்போது நாம் சொல்ல இருக்கும் இந்த யோகம் என்பது , மண்ணில் மண்ணாக மறையப்போகும் இந்த மனித உடல், ஒரு பெரிய சாதனையை செய்து , இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ள , வாழ்வதற்கு வர இருக்கின்ற, மனித உயிர்கள் தன்நிலையில் இருந்து உய்யும் பொருட்டு மகரிஷிகளாலும் , யோகிகளாலும் , சித்தர் பெருமக்களாலும் நமக்கு அருளப்பட்டதாகும் .

இந்த யோகம் எதிர்பாராமல் வருவதல்ல , எதிர்பாராமல் வரும் யோகமானது , நமது வாழ்நாளில் வரலாம் , வராமலும் போகலாம்.

ஆனால் இந்த யோகத்தினை பயிற்சியின் வாயிலாக நமக்கு நாமே பெற்றுக் கொள்ளலாம். அதுதான் இந்த யோகத்தின் தனித்தன்மையும் பெருமையுமாகும்.

இதனால் வருகின்ற யோகமானது , எப்பிறப்பிலும் நமது துணையாவதாகும்.

இந்த பயிற்சியினை வாசி யோகம் என்றும், ப்ராணாயாமம் என்றும் , மூச்சு பயிற்சி என்றும் கூறுவார்கள் . ஆனால் மனிதனை தெய்வ நிலை காணச் செய்வதால் இந்த பயிற்சியினை தெய்வநிலை யோகப் பயிற்சி என்பதே சரியாகும்.

இந்த யோகத்திற்கான பயிற்சிக்கு நேரம் காலமும் , உணவு முறையும் மிகவும் முக்யமானதாகும் .

இந்த யோகப்பயிற்சியை முறைப்படுத்தி பூலோக வாசிகளுக்கு அருட்கொடையாக அருளியவர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் ஆவார்கள்.

சாட்சாத் எம்பெருமான் ஆனவர் ஸ்ரீ ஸ்ரீ பார்வதி தேவிக்கு யோகத்தின் அதி சூட்சுமத்தை மனமுவந்து அருளி , தேவியானவர் அதனை பதஞ்சலிக்கும் , வியாக்ரபாதருக்கு அருள்பாலித்து , அதன்பின்னர் அவர்கள் இதற்கு வடிவம் தந்து , பின் அவர்களிடமிருந்து பணிந்து இதனைப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் இதற்கு உரிய பாடல்களையும் , பயிற்சியையும் வகுத்து மனிதர்களின் மேன்மை கருதி உலகறிய அருள் செய்தார்கள் .

பின்னாளில் வந்த பெருமைக்குரிய யோகிகளும் , சித்தர்களும் மனித ஜீவர்கள் பால் பேரன்பு கொண்டு தந்த , சிறப்பு மிக்க அந்த பயிற்சி முறையை எல்லோரும் முறையாக மேற்கொண்டால் வாழ்வில் எல்லா நலமும் , வளமும் அமைதியும், ஆனந்தமும் பெறலாம் .       

யோகப் பயிற்சிக்கு உரிய நேரம் என்னவென்று பார்ப்போம்.

24 நிமிடங்கள் என்பது ஒரு நாழிகை ஆகின்றது ,

2 ½ நாழிகை என்பது 1 மணி நேரம் .

நாளொன்றுக்கு 10 ஜாமம் .

5 ஜாமம் என்பது 12 மணி நேரமாகும் .

10 ஜாமம் என்பது 24 மணி நேரமாகும்

 

அப்படி என்றால் 24 மணியை ஜாமங்களாக பிரிக்கையில் 2 மணி 24 நிமிடங்கள் என்பது ஒரு ஜாமம் என்றாகின்றது.

முப்பது நாழிகைகளை 6 + 6 ஆக பிரித்தால் 5 ஆக பிரிக்கலாம்

பகற் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.

இராக் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.

இதில் பகல் முப்பது நாழிகையில், பூமியை ……..

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை     (6.00-8.24)    ஆகாயமும்

6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    காற்றும்

6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்

6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை  (1.12-3.36)     நீரும்

6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை   (3.36-6.00)          நிலமும் ஆளுகின்றன.

இதில் இரவு  முப்பது நாழிகையில், பூமியை……..

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை    (6.00-8.24)     நிலமும்  

6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    நீரும்

6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்

6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை   (1.12-3.36)         காற்றும்

6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை    (3.36-6.00)    ஆகாயமும் ஆளுகின்றன.

 

இதில் கதிரவன் உதயத்திற்கு முன் 6 நாழிகையும்

(*சுமாராக காலை 3-30 மணி முதல் 6.00 மணி வரையிலும்)

பின் 6 நாழிகையும் (*சுமாராக காலை 6-00 மணி முதல் 8.24 மணி வரையிலும்)

உள்ள காலமே யோகப் பயிற்சிக்கு உகந்ததாக ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் அருளுகின்றார்.

*(தினசரி சூரிய உதயம் கணித்து இந்த நேரத்தை முறையாக தேர்ந்தெடுக்கலாம்.)

 

திருமூலர் 3 ம் தந்திரம் , 16 வார சரத்தில்,

திங்கள் , புதன் , வெள்ளியில் மூச்சை இடைநாடி வழியாகவும் ,

செவ்வாய் , சனி , ஞாயிறில் மூச்சை வலது நாடி வழியாகவும் ,

வளர்பிறை வியாழனில்  மூச்சு இடை நாடியிலும்,

தேய்பிறை வியாழனில் மூச்சு வலது நாடியிலும் பயில வேண்டும் என்கிறார்.

 

மேலும்,

காலையில் யோகம் பயில கபம் நீங்கும்,

நண்பகல் யோகம் பயில கொடிய வாத நோய்கள் தீரும்,

விடியற்காலையில் யோகம் பயில பித்த நோய்கள் அகலும் என்கிறார்.

 

காற்றினை உள்ளுக்கு இழுப்பது “ பூரகம் எனப்படுகிறது ,

காற்றினை வெளி விடல்  “ ரேசகம் “ எனப்படுகிறது,

காற்றினை உள் நிறுத்துதல் “ கும்பகம் “ எனப்படுகிறது.

 

  • 16 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
  • 64 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
  • 32 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் பிராணாயாமம் எனப்படுகின்றது

இந்த முறைக்கு மாறாக வலப்பக்கம் காற்றினை உள்வாங்கி பயிலுதல் “வஞ்சனை” எனப்படும்.

இடைகலை வழியாக 16 மாத்திரை கால அளவு பூரகம் செய்து ,

பிங்கலையில் 32 மாத்திரை கால அளவு இரேசகம் செய்து மீண்டும்

காற்றினை உள்வாங்காமல் 64 மாத்திரை கால அளவு வெளி கும்பகம் செய்ய பல உண்மைகள் தெரியுமாம்.

மாத்திரை கால அளவு என்பது கண் இமைப்போது அல்லது கைந் நொடிப்பொழுது எனப்படுகிறது .

இந்த முறைகள் நன்கு தேர்ந்தவர்களாலேயே செய்யமுடியும்.

மேலும் இவைகளை எல்லாம் தேர்ந்த குருமூலமாகவே பயில வேண்டும்.

ஆரம்ப நிலையில் பயில்பவர்கள் , இதனை 

  • 6 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
  • 24 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
  • 12 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் சாத்தியமாகின்றது என்றறிகிறோம் .

எப்படி என்றாலும் நன்றாக தேர்ந்த குருவின் துணை அவசியமாகின்றது . குருவின் துணையின்றி முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடது நாசியை எப்படி மூடி வலது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , கும்பகம் என்பதனை எப்படி செய்வது என்பதையும் , வலது நாசியை எப்படி மூடி இடது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , வெளி கும்பகம் எவ்வாறு செய்வது என்பதனையும் குருவின் அருகாமையில்தான் செய்ய வேண்டும் .

ஏனென்றால் குருவின் துணையின்றி இந்த பயிற்சியில் ஈடுபட்டு தோல்வி காண்பது மட்டுமல்ல , உடல் தொந்திரவுகளும் ஏற்படுவதுண்டு . ( தொந்தி , அடிக்கடி ஏப்பம் , அடிக்கடி அபானன் பிரிதல், சித்த சுவாதீனம் , பார்வை குறைபாடு போன்றவைகள் )

முறையாக பயிற்சியை பயின்றால் இதனுடைய பலன்கள் சொல்லில் அடங்காதது.

காரணம் , மனித முயற்சியினால் செய்ய முடியாத பலவிதமான சாதனைகளையும், சாகசங்களையும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம் ,

ஆனால் பயில்வோரின் மனதில் முழுக்க முழுக்க தன்னலம் கருதாமையும் , மக்கள் நலனும் , உலக நன்மையை கருதும் மனோபாவமும் இருப்பது அவசியமாகும் .

அடுத்து வருவது உணவு முறைகள் :

மேலே சொல்லப்பட்ட பயிற்சிகள் செவ்வனே முடித்து பயிற்சியில் உயர்நிலை காண சைவ உணவு மிக அவசியமாகின்றது . அசைவ உணவுகள் உண்போர் பயிற்சிகளை தொடர்ந்து பயில்வதே முடியாமல் போகும் . மேலும் உடல் உபாதைகளும் உருவாகும் .

அதனால் இதனை பயில முயல்வோர் அசைவம் உண்பதை நிறுத்தி விடுவதே சிறந்ததாகும் . அப்போதுதான் சிறப்பாகவும் , விரைவாகவும் பயிற்சியில் உயர்நிலை காண முடியும்.

துவரம்பருப்பு சைவ உணவல்ல என்பது மூத்தோர் கூற்றாகும் , சைவம் என்பது பாசிப்பருப்பு குழம்பு , கீரைவகைகள் , தேங்காய் போன்றவை என்பர் .

இந்த பயிற்சி துவங்குவதற்கு ஏற்ற வயது குறைந்தது 18 வயதும், அதிகபட்சம் 45 வயது எனலாம் . இதற்கு மேல் வயது கொண்டவர்கள் வெறும் த்யானம் மட்டும் செய்யலாம்.

உடலும் , மனமும் , எண்ணமும் , செயலிலும் தூய்மையாக இருப்பது மிக அவசியம்.

இந்த பயிற்சியின் மூலமாக வெளிப்படுவதே அடுத்து வரும் அஷ்ட கர்மாக்களும் அதன் பலன்களும் .

அஷ்ட கர்மாக்களை என்னெவென்று அடுத்த பதிவினில் பார்ப்போம்.

Advertisements

முடிவெடுக்கும் முன்னே

 

அன்பு நண்பர்களே வணக்கம்.

ஒருகதை சொல்லப் போகின்றேன் கேளுங்கள் .

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்

“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .

நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .

ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .

நமசிவாய என்றார் ஒருவர் .

ஓம் சக்தி என்றார் மற்றவர் .

உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.

ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .

எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .

அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம், பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .

இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .

சில வருடங்களுக்குப்பின் . . .

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.  

தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .

நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .

இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .

தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை   கண்டான்.

உடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்

இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் , ஒரே ஒரு வாசகம்  ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது . அந்த வாசகம் இதுதான் . . . .

இந்த நிலை மாறும்

அவ்வளவுதான்

வேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .

தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.

இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .

நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.

தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .

மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .

இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .

அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “

மன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே

அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .

ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.

சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.

அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .

இந்த நிலை மாறும்

இதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும்  சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !

 

அன்பின் நண்பர்களே , உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது . சந்தேகம் வேண்டாம் , இதில் வேறு கருத்தில்லை , உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை .

ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.

இந்த நிலை மாறும்

 

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .

அன்புடன் கருணாகரன் .

 

 

கால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும்.

அன்பு நண்பர்களே வணக்கம்.

கால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும்.

இந்த தலைப்பு எந்தகாலமும் பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத, பொருட்செறிவான நடைமுறை செயல் காரண சொல்லாகும் .

விதியும் மதியும் எனபது நமது வாழ்வின் முக்யமான சொற்றொடர்கள் , இந்த வார்த்தைகளை  பயன்படுத்தாத மனிதர்களோ , ஞானிகளோ , சித்தர்களோ , ரிஷிகளோ , தேவர்களோ ஏன் தெய்வங்களோ கூட இல்லை என்றே கூறலாம்.

அந்தஅளவிற்கு விதியும், மதியும் அனைவரின் வாழ்விலும் பங்கெடுக்கின்றது.

கண்ணுக்கு புலப்படாத விதியின் பேரில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அளவில்லை , யாரேனும் விதியினை பார்த்து கேட்க போகிறார்களா அல்லது விதிதான் நம்மை நேரில் பார்த்து கேட்குமா என்னும் அசட்டு தைரியம்தான் .

எல்லாம் என் கிரக அமைப்பு , கர்மா , விதி , தலையெழுத்து , தலை விதி என்பதெல்லாம் ஒரே அர்த்தத்தைத் தரக் கூடிய அல்லது ஒரே செயலின் வெவ்வேறு பெயர்கள் ஆகும்.

ஒருவன் அல்லது ஒருத்தி  இப்படித்தான் வாழ்வார்கள் , வாழவேண்டும்  என்பது தீர்மானிக்கப்பட்டு அதன்படி அவர்கள் வாழக்கூடிய அல்லது அவர்களை வாழ வைக்கக்கூடிய பெற்றோர் அமையப்பெற்ற குடும்பத்தில்  அவர்கள் பிறந்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட முறைமையோடு வாழ்வார்கள் என்பது ஜோதிட சாஸ்திர விதியாக உள்ளபோதும் ,

வல்லான் வகுத்த விதியினை மீறி எதுவும் நடக்க இயலாது , அதுவே தான் முடிவானது என்றபோதும்,

மனிதர்களுக்கு விதிக்கப்பட விதியினை மாற்றி எழுத, அதை எழுதிய பிரம்மனாலேயே முடியாது என்பது சத்யமான சொல் எனும்போதும் ,

முற்பிறப்பில் உயிரினங்கள் செய்த செய்கைகளின் விளைவே இப்பிறப்பின் உயர்வும் , தாழ்வும். ஆகவே அதனை ஒவ்வொரு உயிரினமும் அனுபவித்தே தீர வேண்டும் என்பது சரியான தீர்ப்பென்றபோதும் ,

ஒரு கர்ப்பவதியானவள் தான் கொண்ட கர்ப்பத்தினை தானேதான் பிரசவிக்க வேண்டும் ,. அதனை எவ்வளவு நெருங்கிய உறவானபோதும் யாருக்கும் மாற்றித் தர இயலாது என்பது போல , தனது வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை மனிதர்கள் தானேதான் அனுபவிக்க வேண்டும் என்பதனை மனிதர்கள் எல்லோரும் நன்குணர்ந்த போதிலும் கூட ,       

அந்த விதி என்னவென்றே தெரியாமல், உலகில் வாழும் ஒருவன் அல்லது ஒருத்தி, தன்னுடைய எல்லாவகையான தோல்விகளுக்கு மட்டும் விதியின் பால் குறை சொல்வதை,

ஆமாம் விதிதான் காரணம் என்று ஏற்கமுடியுமா ?

இன்னதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று எந்த ஒரு மனிதரும் தெரிந்து கொள்ள முடியாது எனும் போது , விதியினை என்னவென்று அறியாதவரை , அது எப்படி விதியின் விதியாக இருக்க முடியும் ?

நமது அசாதாரண முயற்சிகள் தோல்வியை தழுவினால் , நாம் கடுமையான முயற்சியும் , அதனை செயலாக்க மிக அதிக உத்வேகமும் காட்டாமல் விதி சரியில்லை என கூறலாமா ?.

தான் செய்யும் தவறுகளுக்கும் , தப்புகளுக்கும் விதியின் சாயம் பூசப்படுவது தடுக்கப்படவேண்டும் அல்லவா !

பலமுறைகள் கடும் தோல்வியும் எதிர்ப்பும் கண்டவர்கள் பலரும் மகோன்னத வெற்றி கண்டுள்ளதை சரித்திரம் பாராட்டி பெருமைபடுகிறதே !!

முதல் முறையிலேயே வெற்றிக் கனியை சுவைத்தவர்கள் வெகு சிலரே !!

தெரியாத விதியை எண்ணி நமது முயற்சிகளை நாம் ஏன் நிறுத்திக்கொள்ள வேண்டும் ?

விதி மனிதர்களின் எந்தமுயற்சியையும் செய்யாதே என்று தடுப்பதில்லையே?

 

நமது முயற்சியில் அல்லது நமது செயலாக்கத்தில் நாம் முழுமையாக ஈடுபாடற்று இருப்பதும் ஒரு காரணமாகாதா ?

முயற்சி செய்யக் கூட முயற்சிக்காதது மனிதனின் முடியாமைதானே ?

இந்நிலையில் . . .

தனது முயற்சியை யாரோ தடுப்பதாக தானே நினைத்துக்கொண்டு அல்லது தனது முயற்சியை விதியே தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாக எண்ணிக் கொள்வது தவறல்லவா ?

உதாரணமாக :

தனக்கு நீண்ட ஆயுள் உண்டென்ற ஜோதிட நம்பிக்கை உள்ள ஒருமனிதன் ஓடுகின்ற கனரக வாகனத்தில் தலை வைப்பது எப்படி அபத்தமானதோ !

நேரம் தனக்கு மிக நன்றாக இருப்பதாக கருதும் மனிதன் , தொழிலேதும் செய்ய முயற்சிக்காமல் , “ நேரம் நல்லா இருக்கு “ என்று சொல்லிக் கொண்டு  வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எப்படி நன்மையை தராதோ அது போல ,

இது போன்ற தவறான நம்பிக்கைகளால் (கொள்கைகளால்), நமது எண்ணங்களோ , செயல்களோ நிறைவேறாதபோது , நமது மனம் சங்கடப்பட்டு , இறை வழிபாட்டில் நம்பிக்கையுடன் , முழுமன ஈடுபாட்டுடன் செயல்படாமல் சலனப்பட்டு போகும்.

காரணம், மனிதர்களின் இயல்பான சுபாவமே ஒன்றை உயிரினும் மேலாக நேசித்தல் அதன் பயன் தனக்கு உபயோகமில்லாவிடில் அதனை உடனடியாக வெறுத்துவிடும் என்பதாகும்.

மேலும் இதனை ஒரு சாரார் மூட நம்பிக்கை எனும் போது நம்மால் மறுத்து பேச இயலாது போகும் .

அதனால்தான் எதனையும் விதியின் மேல் ஏற்றிவிட்டால் “நான் என்னசெய்வேன் என்னால் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டேன் எல்லாம் விதி” என்று நாம் சுகமாக இருக்கலாம் எனும் மனோபாவம் வளர்ந்து விட்டால், பின்னொருநாளில் இவ்வாறு மன மாற்றம் கண்டு மனிதர்கள் தன்னுடைய சுய தெய்வத்தன்மையை இழந்து விடக்கூடும் எனும் அச்சத்தினால் தான் இக்கட்டுரை பிறந்தது.

  1. விதி என்பது இதுதான் என்று யாருக்கும் தெரியாது
  2. விதியை மாற்றும் வலிமை யாருக்கும் கிடையாது.
  3. விதியை இறைவனின் கருணை இருந்தால் தெரிந்து கொள்ளலாம்
  4. விதியை தெரிந்து கொண்டாலும் அதனை மீறி நடக்க மனிதர்களால் முடியாது

இந்த வலிமை மிகுந்த வார்த்தைகளில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் . இவை உண்மை மிகுந்துள்ள வாசகங்கள் .

ஆனால் அதற்காக நாம் முடங்க வேண்டிய அவசியம் என்ன?

சரி , இப்போது விதி எவ்வாறாக செயல்படுகிறதென்று பார்ப்போம்.

விதி என்பது மனிதனின் சுபநலம் அல்லது அசுப நலம் இரண்டிற்கும் பொதுக் காரணியாகும் .

நன்மையையும் தீமையையும் ஒரு விதியே தருகிறது – நன்மைக்கு ஒரு விதியும், தீமைக்கு ஒரு விதியுமாக செயல்படுவதில்லை.

அப்படியானால் நமது தீர்மானத்தில்தான் கொஞ்சம் (?) கோளாறு உள்ளது.

நாம் ஒரு செயலை செய்ய துவங்கும் வரை அமைதியாக காத்திருக்கும் விதி, நாம் செயலாற்ற ஆரம்பித்தவுடன் மளமளவென வரைபடம் தயாரிக்க துவங்குகிறது.

நமது செயல் திட்டம் சரியான இருந்து நமது உழைப்பும் சரியாக இருந்து நாமும் முழு நம்பிக்கையோடு இருந்தால் வெற்றி நமதாகின்றது.

நமது செயல் திட்டம் சரியாக இருந்து நமது உழைப்பும் , நம்பிக்கையும் முழு அளவில் இல்லாதபோது வெற்றி கிடைப்பதில்லை ,

இதனைத்தான் விதி எழுதுகிறது .

நட்டு வைத்தது முள் செடியாக இருந்தால் கங்கை நீர் ஊற்றினாலும் முள் செடிதானே முளைக்கும்.

அவநம்பிக்கையோடு , எனக்கு இதெல்லாம் நடக்காது , என் தலைஎழுத்து , கர்மா , விதி என்கிற தீர்மானமான முடிவோடு நாம் செய்யும் எந்த காரியமும் நடைபெறுவது நிச்சயமில்லைதான் . காரணம் நாம் எதனை அதிகமாக நம்பிக்கையோடு முயற்சிக்கின்றோமோ அதுதான் நடக்கும் .

வெற்றி பெறவேண்டும் என்கிற சாதாரண எண்ணமும் ,

நமக்கு தோல்விதான் என்கிற தீவிரமான, நிச்சயமான நம்பிக்கையும் நம்மிடம் வேரூன்றியும் நின்றால் ,

அதுவே நமது வெற்றியின்மைக்கு முழுக் காரணமாகும்.

இப்போது புரிகிறதா ?

ஆக விதியை எழுதுவதே நாம்தான் , ஆனால் ஒவ்வொரு மனிதரும் தனக்கான விதியை தானே எழுதி விட்டு அதனை வேறு யாரோ எங்கிருந்தோ எழுதுவதாக கற்பனையும் செய்து கொண்டால் . . . .

இருட்டில் காற்றில் அசையும் துணியின் நிழலைக் கண்டு பயப்படும் குழந்தையைப் போல . .

மனிதர்கள், இல்லாத விதியினை , – இனிமேல்தான் தன்னால் உருவாக்கப்பட போகின்ற விதியினை – இப்போதே இருப்பதாக எண்ணி பயம் கொள்ளுவதும், அந்த விதிதான் தன்னை இப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது என்றெRண்ணுவதும்  அப்படித்தான் இருக்கின்றது.

விதி என்று ஒன்று உண்டு , ஆனால் அதனை தீர்மானிப்பது மனிதர்கள்தான் , இறைவன் அல்ல , கிரகங்கள் அல்ல .

இறைவனுக்கு இதுவல்ல வேலை , கிரகங்கள், நன்மை தீமை என இரண்டு விதமான கார்யங்களுக்கும் பொதுவானவை .

நன்மையை அல்லது சரியான வழியை தேர்ந்தெடுத்தால் அதன்படியும் , தீமையை அல்லது சரியற்ற வழியை தேர்ந்தெடுத்தால் அதன்படியும் நம்மை வழி நடத்தும் அவ்வளவே . அதைத் தவிர அப்படி செய்யாதே , இப்படி செய்யாதே என்றெல்லாம் கிரகங்கள் தடுக்காது .

விருப்பம் மனிதர்களது , அதனை நிறைவேற்றுவதும் மனிதர்களே , நிறைவேறாமல் செய்து கொள்வதும் அவர்களே .

கால்பங்கு விதியினை , மனிதர்கள் தங்களது முக்கால்பங்கு மதியினால் முழு பங்கு விதியாக்கும் வேடிக்கைதான் இன்றைய நடைமுறையில் காண்கிறோம்.

மனிதர்கள் விதியை சரியாக வகுத்து அதன்படி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் , நன்மையையும், தீமையையும் பகுத்தறியும் பகுத்தறிவு எனும் பேராயுதம் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது .

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள் பெரியோர்.

விதியை மதியால் வெல்லலாம் என்பது விதியாக இருந்தால் வெல்லலாம் என்போரும் உண்டு .

இல்லாத விதியை உருவாக்கி வென்றவன் அர்ச்சுனன் , இருந்த விதியை இல்லாமல் செய்து சென்றவன் கர்ணன் .

கடுமையான தவத்தின் மூலமாக எல்லாவற்றையும் மாற்றி அமைக்கலாம் என்றாலும் அதுவும் அந்த மனிதனேதான் தவம் செய்து மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் தவம் செய்து மாற்றித் தர முடியாது ,

அப்படி எனும் போது . .

முழு மன நம்பிக்கையோடு , தீவிர முயற்சியோடு , வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்துடன் செயல்பட்டால் எல்லாவித முயற்சிகளும் ஜெயம் பெறும் என்பதே விதியாகும்.

விதியை உருவாக்குவது மனிதர்களே அன்றி வேறுயாரும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வோம் .

வெற்றியை நமதாக்குவோம் , வாழ்வில் அனைத்து நலனும் பெறுவோம் .

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன் .  

பேசுங்கள் நிறைய பேசுங்கள்

 

அன்பு நண்பர்களே வணக்கம்.

பேசுங்கள் , நிறைய பேசுங்கள் என்கிற கருத்தினில் ஓர் ஆய்வு .

நிறைய பேசுவதனால் என்ன நடைபெறுகிறது ?.

பேசப்படும் செய்தியைப் பொறுத்துதான் மாற்றங்கள் உண்டாகும்.

பரிமாறப்படும் விஷயங்கள் என்று பார்க்கும் போது நிறைய உதாரணங்களை சொல்லலாம்.

சில விஷயங்களை மட்டும் பார்ப்போம் .

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள பேசுதல் முக்கியமான காரணமாகின்றது .

ஒருவரைப் புரிந்து கொள்ளாமலேயே அவரோடு ஒரு பகைமை உணர்வோடு பேசாமல் இருப்போம் , அவ்வாறான வேளைதனில் பேசுவது ஒருவர் மேல் மற்றவர் புரிதலுடன் , அன்பு கொள்ளும் வாய்ப்பினையும் தருகின்றது.

மேலும் ஒருவர் பேசும்போதுதான் மனம் அமைதியையும் , தெளிவையும் , மற்றவர்களிடமிருந்து பலவிதமான புதிய அறிதலையும் பெற முடிகிறது.

பேசாதவரையில் நமக்குள்ளேயே நாம் மடங்கித்தான் இருப்போம் , நமது எண்ணங்களும் , செயல்களும் , புத்தியும் , ஞானமும் விசாலமாக வேண்டுமானால் பேச வேண்டியது கட்டாயமாகின்றது . 

குறிப்பாக மனம் வெதும்பிய நிலையில், குழம்பிய மனநிலையில்  உள்ளவர் தன் நிலையை , தனது நண்பர்களோடு பகிர்ந்து பேசும்போது அவரது மனம் அமைதியையும் , சாந்தமும் பெறமுடியும் .

ஒருவரது மனம் வேதனையில் வாடும்போது பேசப்படுகின்ற பேச்சானது அவரது வேதனையை தீர்த்து ஓரளவு சமாதானம் பெற வழி செய்கிறது .

குடும்ப கோர்ட்டுகளில் பிரிவினை கேட்கும் தம்பதிகள் இருவரையும் பேசச் செய்து மனமாற்றம் ஏற்பட செய்கிறார்கள், இதனால் பிரிந்துவிட எண்ணியவர்கள் தங்களை , தங்கள் நிலையை உணர்ந்து மீண்டும் இணைந்து வாழ்வதுண்டு , வாழ்கிறார்கள் .

தன்னை மாய்த்துக் கொள்ள எண்ணியவர்கள் கூட தனது நண்பர்களிடம் தனது சூழ்நிலையை பகிர்ந்து பேசி அவர்களின் ஆறுதலான வார்த்தையினை கேட்டு தனது உயிரை விட்டுவிடும் முடிவினை மாற்றிக் கொண்டதுண்டு.

ஆனால் பேசாமல் தன்னுள்ளேயே மனம் குமுறிக் கொண்டிருந்தால் நமது மனம் நம்மை சுய பச்சாதாபத்தில் தள்ளி “ யாருக்கும் தீங்கெண்ணாத எனக்கேன் துன்பம் தொடர்கதையானது ? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது ? எல்லோருக்கும் நல்லது நினைக்கும் எனக்கா இந்த நிலை ? அப்படி இப்படி என்று மனம் நம்மை குழப்போ குழப்பென்று குழப்பி , நம்மை ஒரு வழியாக்கி விடும் .

சமாதானப் பேச்சானாலும் , அன்பினை பகிர்ந்து கொள்ளும் பேச்சானாலும் அதனை மனம் திறந்து பேசியே அடைய முடியும் .

இருவர் கடுமையாக பேசி சண்டையிடும் போது மூன்றாமவர் குறுக்கிட்டு நிலையைப் பேசி பகிரும் போது அங்கே நிச்சயம் சாந்தமும் சமாதானமும் பிறக்கின்றது.

உண்மையிலேயே மனம் விட்டு பேசும்போது பலவிஷயங்கள் தெளிவாகும் வாய்ப்பு உண்டாகின்றது .

நம்மை வெல்ல வேறு யாரும் தேவையில்லை , நமது மனமே நம்மை வென்று விடுகின்றது .

வாழ்வியலில் துன்பமும் இன்பமும் கலந்தே இருக்கின்றது , இன்பத்தை முழு மனத்தோடு பிரியத்தோடு விரைவில் அனுபவிக்கும் நாம், துன்பத்தினை மனமின்றி ஏற்றுக்கொள்வதால் அது மிகவும் சிரமமான, நீண்டகால வேதனையாக தெரிகின்றது .

உதாரணமாக :

நமது வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு ஒரு வாகனத்தில் செல்வதாக வைத்துக் கொள்வோம் . செல்லும்போது ஒரு மணி நேரமாக இருந்த பயணம் திரும்பி வரும்போது குறைகின்றது , இதன் காரணம், நாம் போகும் போது இந்த பயணம் ஒரு கடமையாகவும் , திரும்பி வரும் போது இதே பயணம் வீடு நோக்கி வரும் ஆவலோடும் இருப்பதுதான்.

மனம் ஒரு செயலை பிரியமாக செய்யும் போது அந்த காரியம் இலகுவானதாகவும், அதே காரியத்தை பிரியமின்றி செய்யும் போது கடினமானதாகவும் உணர்கின்றது.

அடிப்படையில் . . . .

நாம் பெரும்பாலும் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்துகிறார்கள் என்றெண்ணியே மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம். அதனால் துன்பம் என்பதே நமக்கு மட்டும் வருவதாக எண்ணுகிறோம்.

எவ்வளவு செய்தாலும் நம்மை மதிப்பதில்லை , எவ்வளவு கொடுத்தாலும் நம்மேல் அன்பு காட்டுவதில்லை , ஏனோ தெரியவில்லை யாருக்குமே நம்மை பிடிப்பதில்லை என்றெண்ணும் மனோபாவம் இன்று எங்கும் பரவலாக பெருகிவிட்டது.

நாம் சிரிப்பதோ , துக்கிப்பதோ நமது செயலின் நிகழ்வேயன்றி வேறு ஒருவரால் நம்மீது திணிக்கப்பட்டதல்ல . இதனைத்தான் செய்வினை அதாவது நாம் முன்பு செய்த வினை என்றார்கள்.

நமது ஒவ்வொரு காரியங்களும் நம்மால் தீர்மானிக்கப்பட்டவையே என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் போதும் அடுத்து நடப்பது நன்றாகவே இருக்கும் . ஏனென்றால் தனக்கு தன்னாலேயே தீங்கு வரும் என உணர்ந்த மனிதன் தனக்கே தீங்கெண்ணுவானா ? என்ன ?

உண்மை நிலை அதுதானே.

ஆனால் எந்த மனிதனும் அதனை எண்ணுவதே இல்லை.

பலரின் கருத்து என்னவென்றால் . . .

என்னால் யாருக்கும் தொல்லையில்லை , எவருக்கும் நான் கெடுதல் நினைப்பதில்லை , எனது செயல் தீயதோ , நல்லதோ நானறியேன் , எனது கடமையைத்தான் செய்கிறேன் , அதில் நான் மாறுவதில்லை ,

மேலும் , நம்மால் நான்கு பேருக்கு நன்மை உண்டாகுமென்றால் எதுவுமே தீதில்லை என்போர் உலகில் உண்டு ,

ஆனால் இந்த தத்துவ வேதாந்த சித்தாந்தமெல்லாம் நடைமுறை வாழ்வில் சிதறுண்டு போனதைத்தான் வீரமாமுனிவரின் முற்காலம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது .

“எம்மைக்காக்கும் பொருட்டு நீர் செய்த எந்த பாபங்களும் , தீய கார்யங்களும் எம்மை தீண்டாது, அதற்கு நீர் மட்டுமே பொறுப்பு” என்ற மனையாளின் சொல்லும் , பிள்ளைகளின் வாக்கும் அந்த வழிப்பறிக் கொள்ளையனை ஒரு வீரமாமுனிவனாக்கியது .

குடும்பத்திற்காக நான் செய்வது நன்மையோ தீமையோ எதுவானாலும் அதில்  அவர்களுக்கும் பங்குண்டு எனும் வேதாந்த வாதம் பயனற்றது .

யாரையும் காக்கும் பொறுப்பு நமக்கென இருந்தால் அந்த பொறுப்பினை தூய்மையான, கபடற்ற, சத்யமான நெறியில் நின்றுதான் காக்க வேண்டு மென்பதனை மேலே சொல்லப்பட்ட ஸ்ரீ வீரமாமுனிவரின் வரலாறு மனிதர்களுக்கு தெளிவாக போதிக்கின்றது .

அன்று பேசியதால்தான் வீரமாமுனிவர் தெளிவானார் , பேசாமல் இருந்திருப்பாரேயானால் வாழ்வியலின் தெளிவற்றவராக இருந்திருப்பார் . பலவிதமான தீய செயல்களின் நாயகனாக வாழ்ந்திருப்பார் ,

ஆனால் நமக்கு ஒரு வீரமாமுனிவர் கிடைத்திருக்கமாட்டார் .

இது என்ன குழந்தை ? இது என்ன வளர்ந்த மனிதன் ? இது என்ன வயோதிக தோற்றம் ? இது என்ன பிரேதம் என கேள்விகளை கேட்டதினால்தான் இளவரசனான சித்தார்த்தன் ஒரு கௌதம புத்தர் ஆனான்.

இன்றுள்ள மனிதர்களில் எத்துணையோ வீரமாமுனிவர்களும் , புத்தர்களும் சித்தர்களும் பொதிந்து இருக்கலாம் , அவர்களை மற்றவர்கள் அடையாளம் காண வேண்டுமானால் பேச வேண்டும் .

மௌனம கலையாமல் மௌனியாக இருக்கும் வரை முகவரியில்லாத கடிதமாக முடங்க வேண்டிய நிலை ஏற்படும் . வாழ்வு முடிந்தபின் அவருக்கு  இதெல்லாம் தெரியும் என்று பேசுவதால் பயனில்லை அல்லவா ?

இயற்கை மனிதருக்கு பல விஷயங்களை அறியத்தருவதே சக மனிதரிடம் பேசி பகிர்ந்து கொள்ளத்தான் , மனதிற்குள்ளேயே வைத்து புழுங்க அல்ல.

இன்பமோ துன்பமோ பகிர்ந்தால் . . . . நல்லது

பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகின்றது என்றும் ,

பகிர்ந்த துன்பம் பாதியாகின்றதென்றும் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

எந்த ஒரு விஷயத்திற்கும் பேசுவதென்பது நல்ல பலன்களைத் தரும்.

துன்பத்தை பகிர்ந்து பேசி குறைப்போம்

இன்பத்தை பகிர்ந்து பேசி கூட்டுவோம்

சகாக்களோடு மனம் திறந்து பேசுங்கள் , பேசுங்கள் , நிறைய பேசுங்கள் .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன் .

   

     

 

சின்னத் தவறுதான் . . . .

அன்பு நண்பர்களே , வணக்கம்.

சின்னத் தவறு எனும் ஒரு செயல்பாட்டு குறியீட்டினை பார்ப்போம் .

நாம் செய்யும் செயல் நமக்கோ , பிறருக்கோ பாதிப்பினை தருமேயானால் அதனை தவறு , தப்பு என்று சொல்கிறோம்.

அப்படி நேர்கின்ற பாதிப்பானது குறைவான பாதிப்பினை தருமேயானால் அதனை சிறு தவறு என்றும் , பெரிய அளவினில் பாதிப்பினை ஏற்படுத்து மானால் அதனை பெரிய தவறு என்றும் சொல்லப்படும்.

உதாரணமாக :

நமது செயல் அல்லது பொதுவாக ஒருவரது செயல், அவருக்கோ, மற்றவருக்கோ  மனச் சங்கடத்தை தந்து மன உளைச்சலைத் தருமானாலும் , பெரும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொருட்சேதத்தையும் தருமானால் அது சிறிய தவறு எனக் கொள்ளப்படுகின்றது.

நமது செயல் அல்லது பொதுவாக ஒருவரது செயல், அவருக்கோ , மற்றவருக்கோ பெருமளவு மன உளைச்சலுடன், பெருமளவு பொருள் , தொழில் என எல்லாவகையிலும் சேதம்  ஏற்படுமானால் அதனை பெரும் தவறு என்று சொல்கின்றோம்.

முன்னோர்கள், ஒருவரால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு சிறிதாக இருக்குமானால் அதனை தவறு என்றும் , ஒருவரால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு பெரிதாக இருக்குமானால் அதனை தப்பு என்றும் வகைப் படுத்தினார்கள்.

 

அதாவது ஒருவர், மற்றவருக்கு தன்னால் ஏற்படப்போகும் விளைவின் பாதிப்பினை உணராமல் இருந்திருப்பாரேயானால் அது தவறு (தவறென அறியாமல் செய்தது) என்றும்,

ஒருவர் , மற்றவரை தனது செயல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும் என நன்கு அறிந்தே செய்தாரென்றால் அது தப்பு என்றும் சொல்லி வைத்தார்கள்.

மேலும் நமது முன்னோர்கள், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல மன்னிக்கப்பட வேண்டியவர்கள், ஆகவே அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பினை தர வேண்டும் எனவும்,

 

தப்பு எனத் தெரிந்தே செய்தவர்களுக்கு மன்னிப்பளிக்க கூடாது, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் , அவர்கள் செய்த தப்பை எண்ணி எண்ணி வருந்த வேண்டும் , ஆகவே அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை தர வேண்டும் எனவும் தீர்ப்பினை வகுத்தார்கள்.

இதனால் அன்றைய மனிதர்கள் தவறு செய்து மன்னிக்கபடுவதோ, தப்பினை செய்து தண்டனை பெறுவதையோ அவமானமாக கருதினார்கள்.

பின்னாளில் தனது சந்ததிகளைக் கூட யாரும் தன்னைக் காரணம் காட்டி பழிச்சொல்லை சொல்லி விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்.

உதாரணமாக :

இன்றுவரை புகழ் பெற்ற கட்டபொம்மனைப் புகழும் போதெல்லாம் அவரைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனை இழித்துப் பேசி வருகின்றோம்.

வாழ் நாளில் எட்டப்பன் செய்த ஒரே தப்பு மாமன்னன் கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தது தான் .

ஆனால், குறுநில மன்னனான எட்டப்பனின் நாட்டில் எட்டப்பனின் பெயரில் எட்டு என்று வருவதால் ஒன்றிரண்டு எண்ணும்போது எட்டு என்று சொல்லாமல் மன்னன் அதாவது ராஜா என்று சொல்வார்களாம், பதினெட்டு என்று சொல்லாமல் பத்து ராஜா என்பார்களாம்.

இயேசு பிரானின் புகழை பேசும் போதெல்லாம் அவரைக் காட்டிக்கொடுத்த சீடன் யூதாஸ் இன்றளவும் கிருத்துவ மக்களால் சபிக்கப்பட்டு கொண்டிருக்கின்றான் . வாழ்நாளில் அவன் செய்த முதலும் கடைசியுமான தப்பு அது ஒன்றுதான்.

நமது முன்னோர்கள் , இதனைபோல தமது குலமோ , குடும்பமோ இழிவாக பேசப்பட்டு விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதை உணர்வு மிகுதியாகக் கொண்டிருந்தார்கள்.   

அன்றைய மனிதர்களின் போக்கிலும் , இன்றைய மனிதர்களின் போக்கிலும் பெருமளவு மாற்றம் காணப்படுகிறது.

தற்கால நிகழ்வுகளில் சிறு தவறுக்கான மன்னிப்பினை பெற்ற மனிதன் , சிறு தவறினை செய்த தன்னுடைய அனுபவத்தின் மூலமாக பெரும் தவறு ஒன்றிற்கு தன்னை தயார் செய்து கொள்கிறான்.

காரணம் தவறுகள் சிறியதாக இருக்கும் போது மன்னித்து விடுவதால்,

தவறு செய்த மனிதனுக்கு, தவறினால் ஏற்படும் விளைவினால், மற்றவர்கள் படும் துயரமோ , துன்பமோ அறியாத காரணத்தினால்,

தவறுகள் செய்தவரை அது மேலும் பல தவறுகள் செய்திட தூண்டுதலாக அமைந்து விடுகின்றது.

இந்த முறையினால் தவறு செய்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக வழியாகின்றது. இதனால் உலகில் அதிகமாக தவறிழைப்போரின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. இதன்படி உலகின் மக்கள் தொகைக்கு சரியாக தவறிழைப்போர் எண்ணிக்கையும்     கூடும் .

அதாவது தவறிழைப் போரால் , தன்மேல் திணிக்கப்படும் பாதிப்பினை தாங்கித் தாங்கி நொந்துபோன நல்ல மனிதனும் , பொறுமை தனை இழந்து தானும் தவறுகள் செய்ய துணிந்து விடுவான்.

வசதி இல்லாமல் , வாழ்வின் வழியறியாமல் , வேறுவழியின்றி தவறிழைப் போர்களின் எண்ணிக்கையைவிட , எல்லாவிதமான வசதி வாய்ப்புகளோடு, இராஜ போகத்தோடு , அதிகாரமான பதவியில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளின் பாதிப்புகள்தான் அதிகமாகிப் போனது.

காரணம் , தன்மீது யாரும் பழி சுமத்தவோ , தண்டிக்கவோ முடியாது எனும் எண்ணமே ஒரு மனிதனை மென்மேலும் தவறுகள் செய்ய தூண்டுகிறது.

இந்த நிலை மனிதர்களின் மத்தியில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டுக்கு இடையிலும் காணப்படுகின்றது , உயர்நிலையில் உள்ள நாடுகள் , தாழ்நிலை நாடுகளை மேல் தனது ஆதிக்கத்தினை செலுத்துகின்றன.

இன்றைய சூழலில் உலகில் இதுபோன்ற நிகழ்வு சர்வ சாதாரணமாகிப் போனது

பாதிக்கப்பட்ட மனிதரின் நிலையை , வேறு ஒரு மனிதரால் உணர முடியாது.

அது பாதிப்புக்குள்ளான மனிதரால் மட்டுமே உணரத்தக்கதாகும்.

அதனால்தான் அதை பற்றி மற்றவர் சிந்தித்து அபிப்ராயம் சொல்வதோ , தண்டிக்கவேண்டிய தண்டனை குறித்தோ பேசும்போது அது பாதிப்புக்கு உள்ளான மனிதருக்கு திருப்தியளிப்பதில்லை .

பாதிப்புக்குள்ளான ஒரு மனிதரின் நிலையை , தீர்ப்பு சொல்பவர் தானே ஒருநாள் அடையும் போது அவரது பேச்சும் , தண்டனை குறித்த பார்வையும் நிச்சயமாக அப்போது மாறுபடுகிறது. காரணம் , தனக்கு ஒரு நீதியும் , மற்றவருக்கு ஒரு நீதியுமாக செயல்பாடு உண்டாகி விடுகிறது .

இதுதான் தப்பின் ஆரம்ப நிலை .

இப்படியான தவறான நீதி வழங்கப்படுவதால்தான் தவறுகளின் தொடக்கத்தினை தவிர்க்க முடிவதில்லை , ஒவ்வொருவரும் தனக்கென பாதிப்புகள் வரும்போதெல்லாம் மாற்றப்பட்டுவரும் தவறான நீதியானது இன்று மெகா மாற்றத்துடன் தவறு செய்வதே சரியான செயல் என்றாகி விட்டது.

சின்ன வயதினில் ஆரம்பித்த சின்னச் சின்ன விதிமீறல்கள் இன்று மாற்றம் காண முடியாததாகி அதுவே முடிவும் ஆனது . பள்ளிக்கு செல்வதிலிருந்து துவங்கிய விதிமீறல், போக்குவரத்து , வேலை செய்தல், குடும்பம் என அனைத்து வகையிலும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களை விதிகளை மீறவைத்து ஆட்சி செய்கிறது.   

விதிகளை மீறவே மனித மனம் பெரிதும் விரும்புவதால் தப்பினைச் செய்வது தவிர்க்க முடியாததாகிப் போனது. இப்படியாக .,

இந்த எண்ணம் சிறிது சிறிதாக பெருகி இன்று, சின்னதப்பு , பெரிய தப்பு எல்லாம் ஒரே தப்பாகி அது பெரிய விஷயமில்லை எங்கும் நடப்பதுதான் , பாதிக்கப்பட்ட மனிதன் பொறுத்துத்தான் போகவேண்டும் வேறு வழியில்லை என்று ஒருசாரார் சொல்வதையே சட்டமாக்கி விடும் அபாயத்தை நோக்கி நமது வாழ்க்கைப் பயணம் தடுமாற்றமின்றி ஜோராக செல்வதை காண முடிகிறது.

மனிதர்களின் நெடுநாள் மன வக்கிரம் இன்றைய செயல்பாடாகி உள்ளதைத்தான் இந்த நிலை காட்டுகிறது.

மற்றவர்களின் வாய்ப்பை எதையேனும் தந்தாவது தனதாக்கிக் கொள்ளும் மனோபாவம் விஸ்வரூபம் எடுத்தாடுவதை எல்லோரும் காண்கிறோம் .

ஒளிவு மறைவின்றி பிறர் உரிமையை தனதாக்கும் காட்சிகள் நீக்கமற நிறைந்து எங்கும் காண முடிகின்றது.

யாருக்கும் இதில் வெட்கம் இல்லை , அவமானம் இல்லை, அசிங்கம் இல்லை, கேவலம் இல்லை.

இது ஒருவகையான சாமர்த்தியமாக கருதப்படுகின்றது , இதனை புத்திசாலித்தனமாக எண்ணும் பாவனை நம்முள் வ்ருக்ஷமாக வேரூன்றி வளர்ந்து விட்டது.

“அவன்ல்லாம் புத்தியா பொழைக்கிறான் பார் , நீயும் இருக்கியே” என்று நல்லவனையும் கெடவைக்கும் தீய செயலுக்கான முயற்சி எங்கும் ஜோராக நடந்தேறி வருகின்றது. சொந்த வீட்டிலேயே இதற்கு தனிப் பயற்சியும் தருகின்றார்கள் .  

“இந்த வேலையை தேர்ந்தெடுத்தா நல்ல காசு” என்று சேவையை விட பணத்தினை குறிவைக்கும் நோக்கிலேயே அரசு வேலையைத் தேடும் படலம் இனிதே துவங்குகிறது.

பணம் சம்பாதிப்பதைவிட நல்லவனாக இருக்க நினைப்பவர்கள், பிழைக்கத் தெரியாதவர்களாகவும், யாரையும் வாழ விடாதவர்களாகவும் , கொஞ்சம் முட்டாளாகவும் மற்றவர்களின் பார்வையினால் முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

அடிப்படையில் சின்ன தவறுக்கான மன்னிப்புதான் இதன் மூல காரணம். காரணம் , முதல் தவறிலேயே கடுமையான தண்டனையை தந்திருந்தால் இன்றைய மெகா பாதிப்பிலிருந்து உலகம் தப்பித்திருக்கும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனிதர்களின் சுயநலம் மிக்க ஆரம்பகால மன்னிப்புகள்தான் இன்றைய உலகின் மோசமான அழிவு நிலைக்கு காரணமாகி விட்டது.

தவறு, சின்னதோ , பெரிதோ தண்டனை கடுமையாகாத வரையில் மனிதர்களுக்கு பயம் வராது. மனிதர்களுக்கு பயம் வராத வரையில் தவறோ, தப்போ குறையாது , தவறோ, தப்போ குறையாத வரையில் உலகம் பாய்ந்து செல்லும் அழிவின் வேகத்தை தடுக்க யாராலும் முடியாது.

ஆரம்பம் . . . . . சின்னத் தவறுதான் . . . . . . .

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன்                 

 

வாழ்வென்பது . . .

அன்பு நண்பர்களே, வணக்கம்.

வாழ்வென்பது என்னென்று கொஞ்சம் பார்ப்போம்.

மனித வாழ்வை ஞானிகளும் , ரிஷிகளும் , முனிவர்களும் மாயம் (மாயை) என்றும், சித்தர்கள் மனித வாழ்வை கிடைத்தற்கரிய பொக்கிஷமாகவும் சொன்னார்கள். 

(அதனால்தான் சித்தர்கள் இறவாநிலை காண விழைந்தார்கள்) அதற்கு முக்கியமான வேறு ஒரு காரணமும் இருந்தது அதனை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம் .

வாழ்வென்பது என்ன ? 

வாழ்வென்பது மனிதர்கள் உயிரோடிருக்கும் காலத்தை குறிக்கும் ஒரு சொல்.

உயிரோடிருக்கும் போது மனிதர்கள் வாழும் நிலையைத்தான் வாழ்வென்று நாம் குறிப்பிடுகின்றோம்.

வாழ்வெனும் ஒரு சொல்லுக்குள் மனிதர்களின் வாழ்நாள் முழுமையும் அடங்கி விடுகின்றது. 

அதனாலேயே வாழ்வென்பது மிகச்சிறந்ததாக அமைய எல்லோரும் விரும்புகின்றோம்.

வாழ்வென்பது சிறந்ததாக அமைந்திட விரும்புவது உயிர்களின் உரிமை, கடமையும் கூட.

உலகில் காணப்படும் அனைத்து உயிரினங்களிலும் வாழ்வெனும் ஒரு இயலில் பன்முகச் சிறப்பினை காணமுடிகிறது. 

பிறப்பிற்கேற்ப ஒவ்வொரு உயிரும் தங்களது வாழ்வினை சிறப்பித்துக் கொள்கின்றன.

ஓரறிவு என்று நம்மால் சொல்லப்படும் மரங்கள் மனிதர்களால் வெட்டப்பட்டு உயிரிழந்தாலும், உயிரிழக்கும் அந்த நொடிவரை நிழலைத் தருவதையோ, கனிகளைத் தருவதையோ நிறுத்துவதில்லை.

மிருகங்கள் நம்மால் கொன்று புசிக்கப்பட்டாலும் , நம்மை மனிதர்கள் கொன்று புசிக்கத்தான் போகின்றார்கள் எனத் தெரிந்தும் , மனிதர்களோடு (அவர்களின் வஞ்சகம் உணர்ந்தும்) நட்புடனேயே பழகி மரிக்கின்றன.

நம்மால் வளர்க்கப்படும் பறவையினங்கள் நமக்காக , நமது உறவினர்களுக்காக தமது அரும் உயிரை ஈந்து நமக்கு விருந்தாகின்றன. 

ஒருநாள் வாழ்வினைக் கொண்ட மலர்கள் கூட மனிதர்களின் பூஜைக்கும் , கூந்தலுக்கும் மணம் தந்து தனது பிறப்பினை பயனுள்ளதாக்கிக் கொள்கின்றன .

இப்படி ஏதாவது ஒரு வகையில் பிற உயிரினங்கள் வாழ்வென்பதை, வாழ்ந்து அல்லது மரித்து தன்னால் முடிந்த அளவில் சிறப்புடையதாக்கிக் கொள்கின்றன.

ஆனால் மனிதர்கள் ?????????

இதன் வழியாக இந்த உயிரினங்கள் உலகில் வாழும் சக உயிரான மனிதர்களுக்கு என்ன சொல்கின்றன ?

வாழ்வியலின் மாபெரும் உன்னதமான ஒரு செய்தியை மனிதர்களுக்கு அவைகள் மௌனமாக மரணித்து தெரிவிக்கின்றன !

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் இந்த உயிரினங்கள் , ஒவ்வொரு மனித உயிரும், மகோன்னத நிலையை அடையும் ஒரு எளிமையான உபாயத்தை , மாபெரும் தத்துவத்தை , உயர்ந்த ஞானத்தை , இறைவனை எளிமையாக அடையும் வித்தையை நமக்கு சொல்லாமல் சொல்வது புரியும் . 

ஆனால் துரதிஷ்டவசமாக அவைகளை நாம் பார்க்கும் பார்வையில் கருணை இல்லை , அதனின் ருசி மிகுந்த பாகங்கள் தெரிகின்றன. காலையில் நாம் பார்த்த அந்த உயிரினம் இப்போது உணவாக நாம் முன்னே உயிரற்று கிடக்கின்றதே ! 

ஐயகோ . . என்ற கொஞ்சமும் பரிதாப உணர்வின்றி நாவினில் நீர் ஊற்றெடுக்க அதனை சுவைப்பதில் தானே ஆர்வம் காட்டுகின்றோம்.

நமது உறவினரும் நண்பர்களும் நம்மை வாழ்த்தும்படியும் , புகழும்படியும் செய்த அந்த தியாக உயிர் சடலமானதைக் கண்டு நாமே வருந்துவதில்லை, பின்னர் வேறு யார் கவலை கொண்டு பார்க்கப் போகின்றார்கள். 

வாழ்வென்பது என்னவென்று ஒவ்வொரு உயிர்களும் உணர்ந்துதான் இருக்கின்றன ….. 

மனிதர்களைத் தவிர . . .

மரங்கள் தன்னை முழுமையாக வெயிலில் நிறுத்திக் கொண்டு மனிதர்களுக்கு நிழலைத் தந்து மகிழ்கின்றது.

சிறு செடிகளும் கொடிகளும் , பழங்களையும், பூக்களையும் மனிதர்களுக்கு தந்து மகிழ்கின்றது.

அப்பாவி விலங்குகள் முழுமையாக தன்னுயிர் ஈந்து மனிதர்களை வாழச் செய்கின்றது.

பறவை இனங்கள் தனது சந்ததி (முட்டை) யையும் மனிதர்களுக்கென தந்து மரித்துப் போகின்றது .

மனிதர்களாகிய நாம் யாருக்காக எதனை விட்டுக் கொடுத்தோம், பெற்றெடுத்த தாய்க்கும், தகப்பனுக்கும் , உடன்பிறந்த சகோதர , சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும் , செய்த சிறு உதவியைக் கூட வாய்ப்பு கிடைத்தால் சொல்லிக் காட்டி அவர்களை கூனிக் குறுக வைக்கின்றோம். 

ஒரு பேச்சரியாத உயிரினம் கொண்டுள்ள உயரிய பண்பு கூட இல்லாத நமக்கா ஆறறிவு என்று சொல்லிக் கொள்கின்றோம்?

யாரையும் மதிக்கமாட்டோம், யாருக்கும் எந்த பயனும் என்னால் கிடைக்க விடமாட்டேன் , எவ்வளவுதான் கெஞ்சினாலும் பெற்றோரானாலும் உறவினரானாலும் யாருக்கும் எதுவும் தர மாட்டேன் என்று பிடிவாதிப்பது ஆறறிவாகுமா என்ன ?.

யார் சொல்லி தந்தது மனிதர்களுக்கு இந்த நாகரீகத்தை ?

யார் சொல்லி மாற்றமுடியும் இந்த மனோபாவத்தை ?

இதனால் எந்த பயனும் இல்லை எனத் தெரிந்துமே விடாப்பிடியாக வறட்டு வேதாந்தம் பேசி நாமும் தொலைந்து நமது சந்ததியையும் தொலைக்க ஆயத்தப்பட்டு விட்டோமே? 

ஏன் இப்படி ? 

வாழ்வென்பது நாம் வாழ்வதில் இல்லை என்பதையும் பிறரை வாழவைப்பதிலும் , வாழ விடுவதிலுமே ஆழ்ந்துள்ளது என்பதனை எப்போது புரிந்து கொள்வோம் ?

வாழ்வென்பது உலகியலில் பணம் நிறைந்தவனாக வாழ்வதில் இல்லை , சக மனிதர் மேல் அன்பு மனம் நிறைந்தவனாக வாழ்வதில்தான் என்பதை யார் சொல்லித் தரப் போகின்றார்கள் ?.

வாழ்வென்பது பொருள் கொண்டவனாக வாழ்வதில் இல்லை பிற உயிர் மேல் அருள் கொண்டவனாக வாழ்வது என்பதனை எப்போது உணரப் போகின்றோம்?

வாழ்வென்பது வாழும் காலத்திலேயே மறக்கப்படுவது அல்ல – வாழ்வின் பின்னும் நினைவில் நிற்பது என்பதை என்றைக்கு புரிந்து கொள்ளப் போகின்றோம்? 

வாழ்வென்பது வாழ்ந்து மரிப்பதல்ல , மரித்து வாழ்வது என்ற உண்மையைத்தான் சிறிய உயிர்களும் (மரம்,செடி,கொடிகளும்), பெரிய உயிர்களும் (ஆடு,மாடு,கோழிகளும்) நமக்கு இரத்தமாகி நமது நாளங்களில் ஓடி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. 

வாழ்வென்பதை வாழ்வாங்கு வாழ வேண்டும் எனும் ஆவலில்தான் சித்தர் பெருமக்கள் இறவாநிலை வேண்டினார்கள் என்பதை மனிதர்கள் உள்ளார்ந்து உணர்ந்தால் இந்த நிலையை அடியோடு மாற்றிக் கொள்ளலாம்.

இந்த பிறப்பில் மனிதர்கள் செய்யும் சுப , அசுப மற்றும் பாப, புண்ய காரியங்கள் மனிதர்களின் பிறிதொரு பிறப்பிற்கு வழியாகின்றது, 

இந்த பிறப்பில் இல்லாவிட்டால் என்ன , அடுத்த பிறப்பு தான் உண்டே அதில் பார்க்கலாம் என்று இன்றைய மனிதர்கள் நினைக்கலாம். 

(அன்றைய மனிதர்கள் நினைத்ததில்லை)

ஆனால் . . . . 

மறு பிறப்பு உண்டு என்பதினை நன்கு அறிந்த போதிலும் கூட சித்தர் பெருமக்கள் இந்த பிறப்பிலேயே இறவாநிலை ஏன் வேண்டிட வேண்டும் 

இந்த பிறப்பில் மனிதர்கள் கண்ட , அல்லது காணும், செய்த, அல்லது செய்யும் யாவும் மறுபிறப்பினில் முழுமையாக மறக்க வைக்கப்படும் அல்லது மறைத்து வைக்கப்படும் . 

மேலும் மீண்டும் இந்த பிறப்பில் இப்போது உள்ள நிலையை மறு பிறப்பினில் அடைய முடியாமலே கூட போகக் கூடும்.

அப்படி என்றால் இந்த பிறப்பில் அடைந்த உயர்ந்த , உச்சநிலை எல்லாமே இந்த பிறப்போடு போய்விடும் . 

வரும் பிறப்பில் நாம் யார் என்பதே நாம் அறியாத நிலையில் , நான் சென்ற பிறப்பில் சித்தன் , புத்தன் என்றால் நம்மை எங்கே கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்பதை நாமறிவோம் .

மீண்டும் பிறப்புண்டு ஆனால் அது புதியது , மேகங்களற்ற நிர்மலமான வானம் போல. 

முன் பிறப்பின் எந்த ஒரு நினைவும், சிறு துளியும் இல்லாமல். 

அதனால்தான் மீண்டும் பிறக்கும் போது மனிதர்கள் முன் பிறப்பின் நிலையை நினைத்துப் பார்க்கவே முடியாமல் போகலாம் என்பதனை சித்தர் பெருமக்கள் உணர்ந்ததாலேயே தாங்கள் தற்போது இருக்கும் இந்த பிறப்பிலேயே இறவா நிலையினை அடைய கடுமையான தவங்களையும் , யோகங்களையும் , இரசவாதங்களையும் மேற்கொண்டனர்.

ஆனால் நாமோ கிடைத்ததற்கறிய மனித பிறப்பினைக் கொண்டிருந்த போதிலும் அதனை முறையாக பயன்படுத்தாமல் சுய உயிர் வளர்க்கவே பிரயத்தனப்பட்டு வாழ்வென்ற ஒன்றின் உண்மைத்தன்மையை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

இறுதியாக . . . 

வாழ்வென்பது மனிதனாக வாழ்ந்து இறப்பதல்ல , இறந்த பின்னும் சக மனிதர்களின் நினைவில் வாழ்வதாகும்.

மனிதரில் இந்நிலையை கண்டவர்கள் கொஞ்சம்தான் – அந்த கொஞ்சத்தில் நாமும் இணையலாமே .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .

என்றும் அன்புடன் கருணாகரன்

ஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்

அன்பு நண்பர்களே , வணக்கம் .

ஐந்திற்குள் அடங்கிய (இயற்கையின் ஐந்து நிலைக்குள்) அனைத்தும் என்னென்று பார்ப்போம்.

ஐந்தாக அமைந்தவைகள்

* பஞ்சபுராணம் –                                                                                                                            தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு,                       பெரியபுராணம்.

 

* பஞ்ச கங்கை –                                                                                                                              ரத்ன கங்கை,தேவ கங்கை,கயிலாய கங்கை,உத்ர கங்கை, பிரம்ம    கங்கை.

 

* பஞ்சாங்கம் –                                                                                                                                  திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.

 

* பஞ்ச ரிஷிகள் –                                                                                                                            அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.

 

* பஞ்ச குமாரர்கள் –                                                                                                                    விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.

 

* பஞ்ச நந்திகள் –                                                                                                                            போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,

 

* பஞ்ச மூர்த்திகள் –                                                                                                                    விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.

 

* பஞ்சாபிஷேகம் –                                                                                                                      வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை            கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் ,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் ,    விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை
பொருட்கள் கலந்த கந்த தோதகம்.

 

* பஞ்ச பல்லவம் –                                                                                                                       அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.

 

* பஞ்ச இலைகள் –                                                                                                                        வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.

 

* பஞ்ச உற்சவம் –                                                                                                                          நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம்,    மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.

 
* பஞ்ச பருவ உற்சவம் –                                                                                                          அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை                     அஷ்டமி,மாதப்பிறப்பு.

 

* பஞ்ச பூதங்கள் –                                                                                                                          நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்.

 

* பஞ்ச சபைகள் –                                                                                                                          ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.

 

* பஞ்ச ஆரண்யம் –                                                                                                                      உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,                                    அர்த்தஜாமம்.

 

* பஞ்ச முகங்கள் (சிவன்)-                                                                                                       தத் புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்.

 

* பஞ்ச முகங்கள் (காயத்திரி)-                                                                                              பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.

 

* பஞ்ச மாலைகள் –                                                                                                                      இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.

 

* பஞ்சமா யக்ஞம் –                                                                                                                      பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம்,                       மானுஷ்ய யக்ஞம்.

 

* பஞ்ச ரத்தினங்கள் –                                                                                                                   வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

 

* பஞ்ச தந்திரங்கள் –                                                                                                                    மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.

 

* பஞ்ச வர்ணங்கள் –                                                                                                                   வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.

 

* பஞ்ச ஈஸ்வரர்கள் –                                                                                                                  பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்.

 

* பஞ்ச கன்னியர்கள் –                                                                                                               அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.

 

* பஞ்ச பாண்டவர்கள் –                                                                                                              தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.

 

* பஞ்ச ஹோமங்கள் –                                                                                                                கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.

 

* பஞ்ச சுத்திகள் –                                                                                                                ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.

 

* பஞ்ச கோசம் –                                                                                                          அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.

 

* பஞ்ச காவ்யம் (பசு)-                                                                                                                பால், தயிர், நெய், கோமியம், சாணம்.

 

* பஞ்ச லோகம் –                                                                                                                             தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.

 

* பஞ்ச ஜீவநதிகள் –                                                                                                                     ஜீலம், ரவி, சட்லெட்ஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.

 

* பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) –                                                                                சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.

 

* பஞ்ச நிலங்கள் –                                                                                                                           குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

 

* பஞ்ச காப்பியங்கள் –                                                                                                              மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம்.

 

* பஞ்சமா பாதகங்கள் –                                                                                                           காமம், கள்ளுண்டல், களவு, கொலை, பொய்.

 

* பஞ்ச சயனம் –                                                                                                                              அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, மணம்.

 

* பஞ்ச புராண ஆசிரியர்கள் –                                                                                                நால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர்.

 

அன்புடன் கருணாகரன்